அவசர அவசரமாக சமையல் செய்யும் பொழுது சில சமயங்களில் பலரும் வெறுத்து போவது உண்டு. சமையல் செய்யும் பொழுது எப்பொழுதும் நிதானமும், பொறுமையும் தேவை. நிதானம் இல்லை என்றால் சமையலும் சரிவராது. பொறுமையாக செய்யும் சமையலில் ஒன்றிரண்டு பொருட்கள் குறைந்தால் கூட, பெரிதாக பிரச்சனையை ஏற்படுத்தாது. ஆனால் அவசரமாக சமைக்கும் பொழுது சமையலில் ருசி இல்லாமல் போய்விடும். இந்த சமையல் கலையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மேலும் 8 குறிப்புகள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு 1:
சில சமயங்களில் பக்குவம் பார்த்து செய்த ஊறுகாயில் கூட பூஞ்சை காளான் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. எந்த வகையான ஊறுகாயையும் தயாரித்த பின்பு அதன் அளவிற்கு ஏற்ப சுத்தமான உலர்ந்த கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தாளிப்பு கரண்டியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக பாட்டிலின் உள்ளே எல்லா இடங்களிலும் படும்படி விட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஊறுகாயை நிரப்பினால், எவ்வளவு நாட்கள் ஆனாலும் பூஞ்சைக்காளான் நெருங்க கூட செய்யாது.
குறிப்பு 2:
கொத்தமல்லி, கருவேப்பிலை, கீரை வகைகள் மற்றும் மூலிகை பொருட்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் அதனை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அதன் சத்துகள் குறைந்து விடுகிறது. எனவே இதுமாதிரியான பொருட்களை வெளியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி இவற்றின் தண்டு பகுதி தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு கத்தரித்து வைத்தாலே போதும், உலராமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.
குறிப்பு 3:
உப்புமா செய்யும் சேமியா, ரவை போன்ற பொருட்களை நீண்ட நாட்கள் பூச்சி, புழுக்கள் அண்டாமல் பாதுகாக்க அதனை நீங்கள் வாங்கி வந்தவுடன் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்னர் காற்று புகாதபடி ஏர் டைட் கண்டைனரில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசி பயரையும் இப்படி செய்தால் நீண்ட நாட்களுக்கு பூச்சி அரிப்பு ஏற்படாது.
குறிப்பு 4:
அரிசி கூழ் வற்றல் மற்றும் ஜவ்வரிசி வற்றல் போன்றவற்றை நீங்கள் தயாரிக்கும் பொழுது அதன் சுவையும், மணமும் அதிகரிக்க செய்ய கொஞ்சம் கசகசாவை பொடித்து சேர்த்துக் கொள்ளலாம். இப்படி ஒரு வற்றலா? ‘வாவ்’ என்று எல்லோரும் ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள்.
குறிப்பு 5:
சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் தயாரிக்கும் பொழுது நீங்கள் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒரு முறை வாசம் வர வெறும் வாணலியில் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். அரிசி, பருப்பு வறுத்த பின்பு நீங்கள் பொங்கல் செய்யும் பொழுது அதன் சுவையும், மணமும் தனியாக இருக்கும்.
குறிப்பு 6:
உங்களிடம் ஜவ்வரிசி இருக்கும் பொழுது அதனை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கெட்டியான தயிரை ஊற்றி நன்கு கலந்து பணியாரக் குழியில் அப்பங்களாக விட்டு எடுத்தால் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் சுலபமாக தயார்! எண்ணெய் காய வைத்தும் பொரித்து எடுக்கலாம்.
குறிப்பு 7:
தயிர் பச்சடி செய்யும் பொழுது நீங்கள் என்னதான் கெட்டியான தயிர் ஆக ஊற்றினாலும் சில சமயங்களில் நீர்த்துப் போய் விடுகிறது என்றால் கொஞ்சம் நிலக்கடலையை வறுத்து நைஸாக அரைத்து பச்சடியுடன் சேர்த்தால் ரொம்பவே வித்தியாசமான சுவையுடன் கூடிய பச்சடி ரெடியாகி விடும்.
குறிப்பு 8:
ஒரு சில சமயங்களில் தோசை மாவு ரொம்ப சீக்கிரமாகவே புளித்துப் போய்விடும். புளித்த மாவுடன் கொஞ்சம் சோடா உப்பு மற்றும் அரை டம்ளர் அளவிற்கு கொதிக்கும் வெண்ணீரை சேர்த்து நன்கு கலந்து தோசை வார்த்துப் பாருங்கள், புளிப்பு கொஞ்சம் கூட தெரியாது, ருசியும் வித்தியாசமாக சூப்பராக இருக்கும்.