தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பொதுமக்களின் நலனுக்காக குடும்ப அட்டை வழங்குதல் , உணவு பொருட்கள் வினியோகம், சிறப்பு பொது விநியோகத் திட்டம், ரேஷன் கடைகளை கணினி மயமாக்குதல், உள்ளிட்ட பல சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி கிடைக்கவும், பொருட்களின் தரத்தை உறுதி செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கியது முதல் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நியாயவிலை கடைகளில் குடிமைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் தரமாக இல்லை என்றால் ஊழியர்கள் திருப்பி அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பது அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்றும் அதை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் நடத்தப்படும் ஆய்வின்போது காலாவதியான பொருட்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.