10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு கடந்த 19 ஆம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா 3 வது அலை அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜன 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இந்த விடுமுறை இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையொட்டி பள்ளிகள் திறப்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கிறது. இந்த முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெற உள்ளது. இதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 16-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் 28 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.