2019ஆம் ஆண்டிலிருந்து இரட்டை இலையுடன் ஒட்டியிருந்த தாமரை இன்று பிரிந்துள்ளது. மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என ஒன்றாக போட்டியிட்டு மண்ணை கவ்விய கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரிந்திருக்கிறது. இதற்கு பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு தான் காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது. போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவைப் பார்க்க முடியவில்லை.
எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும், ஓர் எதிர்க்கட்சியாக பாஜக திறம்பட செயல்படுகிறது” என்று கூறினார். இது அதிமுக தலைவர்களை விட தொண்டர்கள் மத்தியில் தான் அதீத கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலிட அழுத்தம் காரணமாக தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நயினார் ட்விட் போட்டார். உடனே தலையிட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, எடப்பாடியிடம் போனில் அழைத்து வருத்தம் தெரிவித்தார். இதற்குப் பின் கூட்டணி வழக்கம் போல செயல்படும் என சொல்லப்பட்டது.
ஆனால் இன்று பாஜக தனித்து போட்டியிடும் என அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விளக்கமளித்த அவர், நயினார் நாகேந்திரன் பேச்சு இதற்கு காரணமில்லை எனவும், அடிப்படை அளவில் கட்சியை வளர்க்க இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் கூறினார். கோவையில் பேட்டியளித்த எம்எல்ஏ வானதி சீனிவாசன், “நகராட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு, நயினார் நாகேந்திரனின் பேச்சு காரணமில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அரியலூர் மாணவி லாவன்யா தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதனை வரவேற்கிறோம்.
இப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சியாக இருக்கும் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் உடனடியாக அவரது குடும்பத்தினரை சந்தித்து அதனை வேறு விதமாக மாற்றிய வந்தார். ஆனால் இப்போது மாணவி லாவண்யா மரணத்திற்கு எவ்வித கருத்தும் சொல்லாமல் இருந்து வருகின்றார். பதவி ஏற்ற சிறிது காலத்தில் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இனிமேல் இப்படியொரு உயிரிழப்பு நடக்க கூடாது; கட்டாய மத மாற்றத்தை அரசு தடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். தீர்ப்பு மூலம் லாவன்யா மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளதாக நம்புகிறோம்” என்றார்.