அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டோ கொட்டோவென்று கொட்டி வருகிறது. இப்பனிப்பொழிவு காரணமாக வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன. சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் பனித்துகள்கள் குவிந்து கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
கடுமையான பனிப்புயலால் கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் வரை பனிப்பொழிவு காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 17 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை. லாங் ஐலேண்ட் பகுதியில் ஒரு பெண் பனியில் உறைந்த நிலையில் தனது காரில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இச்செய்தி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் வலியுறுத்தியுள்ளார். மேலும் கிழக்குக் கடற் கரையில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பனிப்புயல் அச்சுறுத்தலால் நேற்று ஒரே நாளில் 3,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.