7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நெல்லையில் உள்ள ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்களும் என இளநிலை மருத்துவப் படிப்பில் மொத்தம் 6,999 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை மாநகராட்சி உட்பட்ட கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு 7.5% மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
கல்லணை பகுதியைச் சேர்ந்த ஞானலசி, இசக்கியம்மாள் மற்றும் நட்சத்திரபிரியா ஆகிய 3 மாணவிகளுக்கும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. அதேபோல் காயத்ரி என்ற மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும் , சௌந்தர்யா என்ற மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்திருக்கிறது. அதேபோல் கிருத்திகா என்ற மாணவிக்கு கோவை தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இதே பள்ளியில் படித்த மேலும் ஒரு மாணவிக்கு கோவை பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் பயில இடம் கிடைத்துள்ளது.
முதல் கட்ட கலந்தாய்விலேயே ஒரே பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது நெல்லை மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குன் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் மேலும் இன்று நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் இதே பள்ளியைச் சார்ந்த பல மாணவிகள் கலந்துகொள்ள இருப்பதாகவும், அவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.