பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கி வருகிறது பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கி தற்போது கொண்டுவந்துள்ள புதிய சட்ட திருத்தத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதாவது ஒரு பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்தால் அவர் பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாக பணியமர்த்தப்பட மாட்டார் என்றும், அதேபோல் பெண்ணின் கர்ப்பம் 3 மாதங்களை தாண்டியிருந்தால் அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படாது என்று எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.
மேலும், ஒருவேளை ஒரு பெண் பணியில் சேரவும், பதவி உயர்வு பெறவும் போதுமான தகுதிகளை பெற்றிருந்தால், அவரது பிரசவ காலம் முடிந்து 4 மாதங்களுக்குப் பிறகே மருத்துவ ரீதியாக பணியில் சேர தகுதியானவராக கருதப்படுவார் என்றும் தெரிவித்திருக்கிறது. எஸ்பிஐ-ன் இந்த புதிய விதிமுறைகள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், பாலின பாகுபாட்டை காட்டுவதாகவும் பல தரப்பினரும் கண்ட்னம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டோஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால், “ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 3 மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்களை பணியில் சேர்வதைத் தடுக்கும் வகையில் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவர்களை ‘தற்காலிகமாக தகுதியற்றவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. இது பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது. பெண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.