பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில்தான் நிறைவுபெற்றது. இதையடுத்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்தையும், 24 மணி நேரம் ரசிகர்கள் பார்க்கமுடியும். அதில் போட்டியாளர்கள் சாப்பிடுவது, உறங்குவது, சண்டை போடுவது என அனைத்து நம்மால் பார்க்க முடியும். இதில் எந்த எடிட்டிங்கும் இருக்காது என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவிக்கு பதிலாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் மட்டுமே ஒளிப்பரப்பப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். அதிலும் வனிதா, ஓவியா, ஜூலி, சினேகன், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளதால் நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் வரும் 30-ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. ஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்த்த நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் பிக்பாஸ் போன்று ஒரு மணி நேர தொகுப்பாக விஜய் டிவியிலும் ஒளிப்பரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.