தமிழ்நாட்டில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா மூன்றாவது அலை காரணமாக பாதிப்புகள் மிக அதிகமாக பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கு மேல் பதிவாகிவந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 3740, செங்கல்பட்டில் 1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
பாதிப்பு குறையத் தொடங்கினால் ஞாயிறு முழு ஊரடங்கு தேவை இருக்காது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எனவே ஞாயிறு முழு ஊரடங்கு இந்த வாரம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை தொடங்கி நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என முதல்வரிடம் பரிந்துரைத்ததாக கூறினார்.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு என்ன முடிவுகள் எடுக்கப்போகிறது என்பது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தால், ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும் என்கிறார்கள்.