திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக குறிப்பிட்ட சில நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் குறித்த முக்கிய அறிவிப்பை தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் என்ற விதத்தில் 28ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இலவச தரிசனத்திற்காக தினமும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுடன் தினமும் 20 ஆயிரம் பேரும், இலவச தரிசன டிக்கெட்டுகளுடன் தினசரி 10 ஆயிரம் பேரும் இனி ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.