கரூரில் தண்ணீரில் இயங்கும் வெல்டிங் இயந்திரம் கண்டுபிடித்த நபர் ஒருவர் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனக்கூறி ஆட்சியர் அலுவலகத்திற்கு செருப்பு மாலையுடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டான்கோவில் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். சின்னாண்டான் கோவில் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர் தண்ணீரில் இயங்கும் வெல்டிங் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த இயந்திரத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை கரூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு செருப்பு மாலையுடன் மனு அளிக்க ரகுநாதன் சென்றுள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, என் பிரச்சனை? ஏன் செருப்பு மாலையுடன் வந்துள்ளீர்கள்? என கேட்டுள்ளனர். மேலும், உடனடியாக செருப்பு மாலையை அகற்றும்படி வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், கொரோனா பரவல் காரணமாக நேரடி மனு பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய போலீசார் மனுவை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ரகுநாதனின் மனுவில், தண்ணீரில் இயங்கும் வெல்டிங் இயந்திரம் ஒன்றை வடிமைத்துள்ளேன். அதற்கு அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறையில் பலமுறை விண்ணப்பித்தும் எனக்கு உரிய அனுமதி கிடைக்கவில்லை. மேலும் எனது மகன் நிலநடுக்கம் குறித்து அறியும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். அதனை அப்போதைய ஆட்சியர் பொன்னாடை போர்த்தியதோடு, உரிய உதவிகளை செய்துகொடுப்பதாக உறுதியளித்தாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நடுத்தர ஏழ்மையாக குடும்பத்த தாங்கள் பெரும் பிரச்சனைகளுக்கு நடுவில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள ரகுநாதன், பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டிய எனது மகன் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருவதாகவும், வாழ்வாதரம் மேம்பட தாங்கள் கண்டுபிடித்த இயந்திரங்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.