கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலமே வகுப்புகளை நடத்தின. அதேபோல செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாகவே நடந்து, அதன்மூலமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் அண்ணா பல்கலைக்கழகமும் அடங்கும். மற்ற பல்கலைக்கழகங்களில் இந்த நடைமுறை எவ்வித குழப்பமின்றி நடைபெற்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டன.
இதையடுத்து புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு, இப்பிரச்சினைகளைக் களையும் பொருட்டு சில சீர்திருத்தங்களை மேற்கொண்டது. தற்போது அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதற்குப் பின்னர் கொரோனா பரவல் குறைந்த பின்பு அக்டோபர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வந்தது. இருப்பினும் நவம்பர்-டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
அப்படியே நடந்தாலும் ஆன்லைன் மூலமாகவா நேரடியாகவா என்ற குழப்பமும் சேர்ந்தே எழுந்தது. ஆன்லைன் தேர்வு கிடையாது என அரசு அறிவிக்க மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த பிரச்சினைகள் ஓய்ந்த உடன் ஜனவரியில் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்த அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் ஒமைக்ரான் பரவல் அதிகமானதால் மாணவர்களுக்கு தேர்வுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டு, அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் விருப்பப்படியே மீண்டும் ஆன்லைனில் தேர்வு நடத்த அரசு முன்வந்துள்ளது.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வை தவிர்த்து அரியர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் தான் நடைபெறும் என உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி உறுதிப்பட தெரிவித்துள்ளார். இச்சூழலில் பி.இ.,பி.டெக்.,பி.ஆர்க். ஆகிய படிப்புகளுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி பிப் 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பாடவாரியாக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு அட்டவணையை இந்த இணைய முகவரியில் சென்று பார்த்துக்கொள்ளலாம். –> https://aucoe.annauniv.edu/timetable.php