தமிழகத்தில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ” அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் யார் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். மன உளைச்சலுக்கு காரணம் வார்டன்தான் என மாணவி சொல்லி இருக்கிறார்; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம். மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் விசாரணை மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறை தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட பள்ளியின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் எந்த வேலையும் வாங்கக்கூடாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பாடங்களை முடிக்க வேண்டியுள்ளது. எனவே பொதுத்தேர்வு அவசியம் . அதன் அடிப்படையில் மே மாதத் தொடக்கத்திலோ இறுதியிலோ பொதுத்தேர்வு நடைபெறலாம் . மே மாதம் ஆக இருந்தாலும் பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும். ஊரடங்கு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.