ரஷ்யா உக்ரைனில் ரஷ்ய சார்பு தலைவரை நிறுவ முயல்வதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் பல முன்னாள் உக்ரேனிய அரசியல்வாதிகளுடன் ஒரு படையெடுப்புக்கான திட்டங்களின் ஒரு பகுதியாக தொடர்பு கொண்டிருந்ததாக பிரித்தானியா கூறுகின்றது.
உக்ரைனுடனான அதன் எல்லைக்கு அருகே ரஷ்யா துருப்புக்களை குவித்தது தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கிற்கும் இடையே அதிக பதற்றம் நிலவிவரும் நிலையில், பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
எனினும், அதன் குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை வழங்க பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது
உக்ரைனின் முன்னாள் சட்டமியற்றுபவர் யெவ்ஹென் முராயேவை ரஷ்ய சார்பு தலைமைத்துவத்திற்குத் தலைமை தாங்குவதற்கான சாத்தியமான வேட்பாளராக ரஷ்ய அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தன்னிடம் தகவல் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
‘உக்ரைன் அரசாங்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டாலும் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். தற்போதைய சூழலின் தீவிரத்தை ரஷ்யா குறைக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு ராஜீய ரீதியில் தீர்வு காணும் பாதையை அந்நாடு பின்தொடர வேண்டும்’என பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘பிரித்தானியா பரப்பும் இந்தத் தவறான தகவல், உக்ரைனை சுற்றி பதற்றத்தை அதிகரிக்கும் நேட்டோ நாடுகளின் நடவடிக்கைகளுக்கான மேலும் ஓர் உதாரணம்’ என கூறினார்.