2வது நாளாக சற்று குறைந்த தொற்று பாதிப்பு.. இந்தியாவில் புதிதாக 3.33 லட்சம் பேருக்கு கொரோனா ..

by Editor News

இந்தியாவில் இரண்டாவது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.92 கோடியை தாண்டியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கியதில் இருந்தே தினசரி கொரோனா தொற்று பாத்திப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. இதேபோல் ஒமைரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு சற்று குறைந்து ஆறுதல் அளித்திருக்கிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20-ந் தேதி 3.47 லட்சமாக இருந்த தொற்று பாதிப்பு, 21 ஆம் தேதி 3.37 லட்சமாக குறைந்த நிலையில் , நேற்று 2-வது நாளாக மீண்டும் குறைந்திருக்கிறது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 92 லட்சத்து 37 ஆயிரத்து 264 ஆக உயர்ந்திருக்கிறது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 46,393 பேருக்கும், கேரளாவில் 45,136 பேருக்கும் , கர்நாடகாவில் 42,470 பேருக்கு நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் 30,744 பேருக்கும் , குஜராத்தில் 23,150 பேருக்கும் , உத்தரபிரதேசத்தில் 16,549 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 525 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரேநாளில் 2, 59,168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சத்து 60 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 21 லட்சத்து 87 ஆயிரத்த்து 205 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மட்டும் 18 லட்சத்து 75 ஆயிரத்து 533 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 71.55 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment