ஏப்ரலில் ஆவது படத்தை வெளியிட கொரோனா அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். உண்மையில் வெளியீட்டு தேதிகள் என பன்மையில் சொல்வதே சரி. ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர்கள் இரு வெளியீட்டு தேதிகளை அறிவித்துள்ளனர்.
நாம் பலமுறை குறிப்பிட்டிருப்பதைப் போல இந்தியாவில் திரைப்படங்கள் எப்போது வெளியாக வேண்டும் என்பதை படம் சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்வதில்லை. கொரோனாவும், அரசு அறிவிக்கும் ஊரடங்குகளும்தான் நிர்ணயிக்கின்றன. இந்த மாதம் 7 ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் கொரோனா தொற்று அதிகரிப்பால் பல மாநிலங்கள் இரவு நேர மற்றும் வார இறுதிநாள் முழு ஊரடங்குகளை அறிவிக்க வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. பாகுபலி 2 படத்தைவிட அதிக வசூலை ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளரும், இயக்குனரும் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஊரடங்கே இருக்கக் கூடாது. திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
அந்த கோல்டன் ப்ரீயட் எப்போது வரும் என்பது தெரியாத நிலையில் நேற்று ஆர்ஆர்ஆர் தயாரிப்புத் தரப்பு படம் எப்போது வெளியாகும் என இரு தேதிகளை அறிவித்துள்ளது.இந்த பேரிடர் காலம் படிப்படியாக சகஜநிலைக்கு வந்து, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்தால் 2022 மார்ச் 18 ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிட தயார் என கூறியுள்ளனர். இல்லையென்றால் 2022 ஏப்ரல் 28 ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மார்ச்சில் சகஜநிலைதிரும்ப வழியில்லை. ஆக, எப்ரல் 28 ஆம் தேதியே ஆர்ஆர்ஆர் திரைக்கு வரும். இதற்கு முன் இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய பாகுபலி 2 இதே ஏப்ரல் 28 ஆம் தேதிதான் (2017) வெளியானது. இன்னொரு படமான அவென்ஜர்ஸ் : இன்பினிட்டி வார் ஏப்ரல் 27 (2018) வெளியானது. அதன் வசூலை முறியடித்த அவென்ஜர்ஸ் : என்ட்கேம் ஏப்ரல் 26 (2019) வெளியானது. ஏப்ரல் 28 ஆர்ஆர்ஆர் வெளியானால் இந்தப் படங்களைப் போல அதுவும் சாதனைப் படைக்கும் என இப்போதே ஆருடம் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.