மும்பையில் 20 மாடிகள் கொண்ட கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடம் அமைந்துள்ளது. கமலா குடியிருப்பு என அழைக்கப்படும் இந்தக் கட்டடத்தின் 18 வது தளத்தில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு , கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பாட்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு ஐசியு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் , 13 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கட்டுக்குள் இருப்பதாகவும், ஆனால் அதிகளவு புகை வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் கட்டடத்திற்குள் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் புகை காரணமாக 6 வயதனவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுவதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.