இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.
ஆந்திராவில் மூன்றாம் அலை சற்று தாமதமாகவே ஆரம்பித்திருந்தாலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜனவரி 23-ம் தேதிக்கு பிறகே ஆந்திராவில் தொற்று எண்ணிக்கை உச்சத்திற்குச் செல்லக் கூடும் என மத்திய சுகாதார துறை எச்சரித்துள்ளது.
இச்சூழலில் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலுள்ள விஞ்ஞானிகள், பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 248 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 96 பேருக்கு தொற்று உறுதியாகிருந்த நிலையில் தற்போது மேலும் 152 பேருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாத இறுதியில் விண்வெளியில் செலுத்தப்பட இருந்த ஜி.பி.எஸ். தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் ககன்யான் திட்டப்பணிகள் கால தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.