இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. முதல் இரண்டு அலைகளை விட மூன்றாம் அலையில் தான் கொரோனா அபரிமிதமாகப் பரவுகிறது. முதல் அலையில் தினசரி பாதிப்பான 7 ஆயிரத்தை தொட 58 நாட்கள் ஆனது. இரண்டாம் அலையில் இதே எண்ணிக்கையை தொட 1 மாதமானாது. ஆனால் மூன்றாம் அலைக்கு ஒரே வாரம் தான் தேவைப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது.
இதற்குக் காரணம் ஒமைக்ரான் கொரோனா தான். அந்த ஒமைக்ரான் ஏற்கெனவே படுத்து கொண்டிருந்த டெல்டாவை உசுப்பிவிட்டுள்ளது. இரண்டும் ஒருசேர பரவுவதால் குறுகிய காலக்கட்டத்திலேயே தினசரி கொரோனா பாதிப்பும் கொரோனா பாசிட்டிவிட்டி விகிதமும் மளமளவென உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிவிட்டது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இச்சூழலில் இந்தியாவில் 249 நாட்களில் இல்லாத வகையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நேற்று 2.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 3 லட்சத்தை கடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் திடீரென உச்சம் பெற்றுள்ளது. ஆம் ஒரே நாள்லில் 491 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 20 லட்சத்தை நெருங்கி வருகிறது. 19 லட்சத்து 24 ஆயிரத்து 51 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் 93.69% ஆக இருக்கிறது.