நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன்(45), திருட்டு வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபாகரன் உடல்நல குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழநதார்.
இந்த நிலையில், பிரபாகரன் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கலந்துகொண்டு போலீசாரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது, போலீசார் தாக்கியதில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போடப்பட்ட பொய்யான வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், பிரபாகரன் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவுசெய்யவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.