இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 656 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கம் உயர்வு குறித்த கவலையை தூண்டியது, அமெரிக்க பெடரல் வங்கி எதிர்பார்த்ததை காட்டிலும் முன்கூட்டியே வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என்ற தகவல் போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,578 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,828 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 89 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.274.85 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 656.04 புள்ளிகள் குறைந்து 60,098.82 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1174.65 புள்ளிகள் சரிவு கண்டு 17,938.40 புள்ளிகளில் முடிவுற்றது.