உருளைக்கிழங்கு ரிங்ஸ்

by Column Editor

சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 200 கிராம் (1 கப்)
ரவை – 100 கிராம் (1/2 கப்)
அரிசி மாவு – 2 ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு – 5 ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள்
கரம் மசாலாப் பொடி – 2 தேக்கரண்டி
மிளகுப் பொடி – 1 தேக்கரண்டி
சீரகப் பொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் ‍ (1/2 கப்)
கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கினை குக்கரில் நன்கு வேக வைத்து தோலை உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் ரவையை வாசம் வரும் வரை ஒரே சீராக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

ரவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், நறுக்கிய வெள்ளைப்பூண்டினைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

அதனுடன் மிளகுப் பொடி, சீரகப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா பொடிகளின் பச்சை வாசனை நீங்கியதும், அதனுடன் அரை கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள ரவை மற்றும் அரிசி மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும். ரவை வெந்து கெட்டினாதும் அதனை இறக்கி விடவும்.

அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும். உருளைக்கிழங்கும் ரவையும் ஒன்றுடன் ஒன்று நன்கு சேரும்படி நன்கு கிளறி சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.

அதிலிருந்து சிறிதளவு மாவினை எடுத்து கார்ன்ஃப்ளார் மாவு தூவிய சப்பாத்திக் கல்லில் வைத்து 1/4 இன்ச் தடிமன் உள்ள சப்பாத்தியாக விரிக்கவும்.

சிறியது பெரியதுமான இரண்டு வெவ்வேறு அளவுள்ள மூடிகளை எடுத்துக் கொள்ளவும். பெரிய மூடியினைக் கொண்டு விரித்த சப்பாத்தி மாவில் படத்தில் உள்ளவாறு வட்டங்களாக துளையிடவும்.

சிறிய மூடியினைப் பயன்படுத்தி பெரிய வட்டங்களுக்குள் சிறிய வட்டங்களாக துளையிடவும். வட்டத்தைச் சுற்றிலும் மற்றும் வட்டத்திற்குள்ளும் உள்ள மாவினை வெளியே எடுத்து விடவும்.

இப்பொழுது வளைய வடிவத்தில் மாவு இருக்கும். இவ்வாறு எல்லா மாவினையும் வளையங்களாக மாற்றிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் அடுப்பினை வைத்து, வளையங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு அவ்வப்போது திருப்பி விடவும்.எண்ணெய் குமிழி அடங்கியதும் வளையங்களை வெளியே எடுத்து விடவும். சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ் தயார்.

Related Posts

Leave a Comment