உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா எனும் பெருந்தொற்று வாட்டி வதைத்து வருகிறது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நான்காம் அலை கடந்து சென்று ஐந்தாம் அலை பரவி வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தினாலும் கொரோனா கட்டுப்படுவதில்லை. புதுவிதமாக உருமாறி புது தலைவலியை உருவாக்குகிறது. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், 4ஆவது பூஸ்டர் போட்டுக்கொண்டால் கூட ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசிகளை நம்பாமல் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இயல்பு வாழ்க்கை இப்போது திரும்பிவிடும் அப்போது திரும்பிவிடும் என எதிர்நோக்கும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாக மாறிவிட்டார்கள். ஏழைகளின் நிலை மிக மோசமாகப் பாதித்துவிட்டது. ஆனால் உலகம் முழுவதுமே ஒருசாரார் மட்டும் முன்பை விட இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளார்கள். ஆம் கொரோனா காலத்திலும் கூட உலக கோடீஸ்வரர்களின் சொத்துகள் இரட்டிப்படைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றால் மற்றவர்களுக்கு எல்லாம் அபாயம் என்றால், கோடீஸ்வரர்கள் அதன் மூலம் ஆதாயம் அடைந்திருக்கின்றனர்.
ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ஆக்ஸ்ஃபாம் (Oxfam) ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. அதில், “‘கொரோனா பேரிடர் காலத்தில் உலகில் உள்ள முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக 99 சதவீத மக்களின் வருமானம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. குறைந்த வருமானம் காரணமாக ஒவ்வொரு நாளும் 21 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆனால் கொரோனா பரவலுக்கு முன்னர் 70,000 கோடி டாலராக இருந்த 10 கோடீஸ்வரர்களின் சொத்து தற்போது 1.50 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு வினாடிக்கு 15 ஆயிரம் டாலர் வீதமும், நாள் ஒன்றுக்கு 1,300 கோடி டாலர் வீதமும் உயர்ந்துள்ளது. இந்த 10 கோடீஸ்வரர்களும் தங்களின் 99.99% சொத்துகளை இழந்தால்கூட, மீதமிருக்கும் சொத்து உலகில் உள்ள 99% மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் உலகம் முழுவதும் உள்ள 310 கோடி மக்களின் சொத்துகளைவிட 6 மடங்கு சொத்து இந்த 10 கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளில் இவர்களின் சொத்து அதிகரித்ததைவிட, பெருந்தொற்றுக் காலத்தில்தான் வேகமாக அதிகரித்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழின் தகவல்படி உலக கோடீஸ்வரர்களில் முதல் 10 இடங்களில் எலான் மக்ஸ், ஜெப் பெசோஸ், பெர்நார்ட் அர்னால்ட் குழுமம், பில்கேட்ஸ், லாரி எலிஸன், லாரி பேஜ், செர்ஜி பிரின், மார்க் சக்கர்பெர்க், ஸ்டீவ் பால்மெர், வாரன் பஃபெட் ஆகியோர் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலோ கொரோனா காரணமாக 102லிருந்து 142ஆக பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.23.14 டிரில்லியனிலிருந்து ரூ.53.16 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.