புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1.40 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு புதுச்சேரி கொரோனா தொற்று பரவலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. பரவலைக் கட்டுப்படுத்த அங்கு ஜன 31 வரை அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று புதிதாக 2093 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் மட்டும் 1,715 ஆக உயர்ந்திருக்கிறது. இதேபோல் , காரைக்காலில் 279 பேருக்கும், ஏனாமில் 54 பேருக்கு ம், , மாஹே – 45 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 40 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,893 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புதுச்சேரியை பொருத்தவரையில் 114 பேர் , காரைக்காலில் 27 பேர், ஏனாமில் 6 பேர், மாஹேவில் 16 பேர் என மொத்தமாக மருத்துவமனைகளில் 163 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8,983 பேரும் என 10,230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 256 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 15 லட்சத்து 3 ஆயிரத்து 355 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் 9 லட்சத்து 9 ஆயிரத்து 544 முதல் டோஸ் தடுப்பூசியும், 5 லட்சத்து 90 ஆயிரத்து 424 இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 2,987 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர்.