ஒரு மனிதன் காற்று மற்றும் நீர் இல்லாமல் வாழ்வது என்பது இயலாத ஒன்று. மனித உடலானது 60 சதவீதம் நீரால் ஆனது. இந்த நீர் உடலில் குறைவாக இருக்கும் போது நாம் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே எப்படி தண்ணீர் குடிப்பது முக்கியமோ, அதேப்போல் அது குடிக்கும் நேரமும் முக்கியமானது. பலர் உணவுகளை உண்ட உடனேயே தண்ணீர் குடிப்போம். ஆனால் அப்படி தண்ணீர் குடிப்பதால் நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்துகிறோம்.
பொதுவாக எதை சாப்பிட்ட உடனேயும் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதை நாம் கேட்டிருப்போம். அதேப்போல் ஒருசில பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று வீட்டு பெரியோர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஏனெனில் இச்செயலால் நமது செரிமான மண்டலம் பாதிக்கப்படும். மனித செரிமான மண்டலமானது ஒரு நிலையான pH அளவில் செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட pH அளவு தேவைப்படுகிறது. இந்நிலையில் நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம், நம் உடலில் உள்ள நீர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்பட்ட பின், தண்ணீர் குடித்தால் அது தீங்கு விளைவிக்கும். இப்போது எந்த உணவுகளை உண்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
பழங்கள்:
பொதுவாக வீட்டில் உள்ள பெரியோர்கள் பழங்களை சாப்பிட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் பழங்களில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகம் உள்ளது. இது சரியாக செரிமானமாக வேண்டும். இந்த பழங்களை செரிமானம் செய்வதற்கு நமது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வெளியிடப்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில், நாம் பழங்களை உண்டதும் தண்ணீர் ஏடித்தால், அந்த அமிலம் நீர்த்துப் போவதோடு, பழங்களும் சரியாக செரிமானமாகாமல் அசௌகரியமாக்கும்.
நீர்ச்சத்துள்ள உணவுகள்:
தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை சரியாக சாப்பிட்டால், செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால், அதன் விளைவாக வயிற்றுப் போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் நீரானது செரிமான செயல்முறையை வேகப்படுத்துகிறது.
உணவு உண்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது:
உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீரானது செரிமானத்தின் தீயை அணைத்து, செரிமான செயல்முறையை சீர்குலைக்கும். இது செரிமான அமிலங்களை நீர்த்துப் போகச் செய்யும். எனவே நீங்கள் உணவு உண்ட பின்னர் குறைந்தது 30 நிமிடம் கழித்து தண்ணீர் குடியுங்கள். ஆயுர்வேதத்தின் படி, உணவு உண்டதும் தண்ணீரைக் குடிப்பது உடல் பருமனை அதிகரிக்கும். அதேப்போல் காரமான அல்லது அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்டதும் தண்ணீர் தாகம் எடுக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் சூடான நீரை 2-3 சிப் மட்டுமே குடிக்க வேண்டும். இதனால் தாகமும் அடங்கும், செரிமான செயல்முறையும் பாதிக்கப்படாது.
ஐஸ்க்ரீம்:
பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஐஸ் க்ரீம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது. ஒருவேளை இவ்வாறு குடித்தால், அதன் விளைவாக தொண்டை வலி, சளி, இருமல் போன்றவை வரலாம்.
வேர்க்கடலை மற்றும் எள்ளு:
வேர்க்கடலை, எள்ளு போன்றவற்றை சாப்பிட பிறகும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களை உண்ட பின்னர் உடனேயே ஒருவர் தண்ணீர் குடித்தால், இருமல் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.
கரும்பு:
சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முடிந்தது. நிச்சயம் சில நாட்களுக்கு அனைவரும் தினமும் கரும்பை சாப்பிடுவோம். அப்படி கரும்பை சாப்பிட்டதும் தண்ணீரைக் குடிக்காதீர்கள். ஏனெனில் கரும்பில் அதிகளவு கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. கருப்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதால், அது உடனடியாக தண்ணீருன் வினைபுரியும் மற்றும் இதில் உள்ள கால்சியம் வயிறு மற்றும் வாயில் பிளவுகள் அல்லது கொப்புளங்களை ஏற்படுத்தும்.