நிறைய பேருக்கு பீச்சுக்கு போனால் வேர்க்கடலை சுண்டல் வாங்கி சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னதான் வீட்டில் வேர்க்கடலையை வைத்து சுண்டல் செய்தாலும், அது பீச்சில் கிடைக்கும் சுண்டலுக்கு இணையாகுமா. கடற்கரையில் வாங்கி சாப்பிடும் சுண்டலின் ருசியே தனி தான். சரி பீச் சுண்டலைப் போலவே அதே ருசியில் நம்முடைய வீட்டில் சுண்டல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா.
முதலில் 50 கிராம் அளவு பச்சை நிலக்கடலையை வாங்கி தண்ணீரில் போட்டு 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரில் நன்றாக ஊறிய பின்பு, தண்ணீரை நன்றாக வடிகட்டி வெறும் வேர்க்கடலையை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஊறிய வேர்க்கடலையை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, வேர்க்கடலைக்கு தேவையான அளவு உப்பு போட்டு, 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொண்டாலும் சரி. அப்படி இல்லை என்றால் கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் ஊறவைத்த இந்த வேர்க்கடலையை போட்டு, மூடி போட்டு பக்குவமாக வேகவைத்து எடுத்துக்கொண்டாலும் சரி. நமக்கு வேகவைத்த வேர்க்கடலை தேவை.
வேகவைத்த வேர்க்கடலையை தண்ணீர் எல்லாம் வடித்து விட்டு தனியாக ஒரு அகலமான பௌலில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த வேகவைத்த வேர்க்கடலையுடன் துருவிய கேரட் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, நறுக்கிய மாங்காய் துண்டுகள் – 1/2 கைப்பிடி அளவு, கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கியது தேவையான அளவு தூவி முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், சாட் மசாலா – 1/2 ஸ்பூன், லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு இப்போது மசாலாவுக்கு தேவையான அளவு மட்டும் உப்புத் தூளை தூவி, ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து சுட சுட வேர்கடலையை அப்படியே பரிமாறி பாருங்கள். பீச் சுண்டல் நமக்கு கிடைக்கும்.
தேவைப்பட்டால் பரிமாறும்போது இதன் மேலே மிக்சர் தூவி பரிமாறினால் இதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். கான் சிப்ஸ் இருந்தாலும் அதை மேலே தூவி குழந்தைகளுக்கு பரிமாறினால் விருப்பமாக சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேர்க்கடலையை இப்படி ருசியாக செய்து கொடுத்தால், யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.
உங்கள் வீட்டில் வேகவைத்த வேர்க்கடலைக்கு ஏற்ப வெங்காயம், தக்காளி, கேரட், மாங்காய், இவைகளை கூடவோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு மசாலாவாக அதிகமாக பிடிக்கும் என்றால் மிளகாய் தூள், சாட் மசாலா இன்னும் கொஞ்சம் அதிகமாக சேர்த்தும் சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம் தான். மிஸ் பண்ணாம இன்னைக்கு ஈவினிங் உங்க வீட்ல வேர்க்கடலை இருந்தா இந்த மசாலா சுண்டல் ட்ரை பண்ணி பாருங்க.