தமிழகத்தில் ஜனவரி 31 வரை 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டு வந்தன.. பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையத்தொடங்கியதை அடுத்து கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஓரளவிற்கு மாணவர்கள் தங்களை நேரடி வகுப்புகளுக்கு தயார்படுத்தி வந்த நிலையில், புதிய அச்சுறுத்தலாக ஒமைக்ரான் வைரஸ் வந்தது… அதோடு கொரோனா மூன்றாவது அலையும் உருவெடுத்துள்ளதால், பள்ளிகளை திறந்திருப்பது அரசுக்கு சவாலானது.
இதனையடுத்து ஜனவரி 5 ஆம் தேதி தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவிருந்தது. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. தற்போது மாணவர்கள் பொங்கல் விடுமுறையில் உள்ள நிலையில், ஜன 19 க்குப் பிறகும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31 வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புக்ளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 19-ஆம் அன்று தொடங்கி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது