இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 2.50 லட்சத்தை கடந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதேபோல் ஒருபுறம் உருமாறிய ஒமிக்ரான் தொற்றும் வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,64,202 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,47,417 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 2.5 லட்சத்தை தினசரி பாதிப்பு கடந்துள்ளது. இது நேற்றைய தினசரி பாதிப்பை விட 6.7% அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஒரேநாளில் 1,09,345 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 12,72,073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 14.78% ஆக பதிவாகி வரும் நிலையில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,753ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய பாதிப்பு 5,488 ஆக இருந்த நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.