இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு என்பது 20 ஆயிரத்தை கடந்து விட்டது. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 911 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதுடன், 25 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோன்ற ஆபத்தான நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் என்ற ஒரே நோக்கத்துடன் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மாநில அரசால் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொங்கல் விழாக்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடுகிற திருவிழாக்களுக்கு முற்றிலுமாக தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை பொங்கல் பண்டிகையை ஒட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு முழுவதும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழலில் பொங்கல் பண்டிகையால் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.