சர்ச்சைக்குரிய டவுனிங் ஸ்ட்ரீட் விருந்து: மன்னிப்பு கோரினார் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!

by Column Editor

கொரோனா வைரஸ் முதலாவது அலையின்போது பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்ட நாளில், டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடத்தப்பட்ட விருந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மன்னிப்பு கோரியுள்ளார்.

‘உங்கள் சொந்த மதுவை கொண்டு வாருங்கள்’ என அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தில் பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாக காட்டும் புகைப்படம் தற்போது வைரலாக பரவிவருகின்றது.

இந்த விவகாரத்தில், பிரதமர் பொறுப்பின்றி செயற்பட்டதற்காக அவர் பதவி விலக வேண்டும் என ஒரு பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் தனது அபத்தமான பொய்கள் மற்றும் சாக்குப்போக்கு கூறியதால் அவர் இப்போது விலக வேண்டும் என கூறியுள்ளார்.

இந்தநிலையில், பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தோட்டத்தில் நடந்த நிகழ்வு தொழில்நுட்ப ரீதியாக விதிகளுக்கு உட்பட்டது என்றாலும் அது பொதுமக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தாம் உணர்ந்திருக்க வேண்டும். என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.

இதனிடையே 2020ஆம் ஆண்டு மே20ஆம் திகதி சமூக இடைவெளியுடன் பானம் அருந்த ஊழியர்களை அழைக்கும் மின்னஞ்சலைப் பிரதமர் பார்க்கவில்லை அல்லது பெறவில்லை என்று பொரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலை பிரதமர் அனுப்பச் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நிகழ்வில் பிரதமர் மற்றும் அவரது இணையர் இருவரும் சுமார் 30 பேருடன் விருந்தில் பங்கேற்றதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களுக்கோ வெளியே ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை சந்திப்பது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment