பொதுவாக வெண்டைக்காயை புளி ஊற்றி பச்சடி செய்வது வழக்கம். புளிக்கு பதிலாக இப்படி தக்காளி சேர்த்தும் வெண்டைக்காய் பச்சடி செய்து அசத்தலாம். சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த தக்காளி வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலியில் விசேஷமாக செய்வது உண்டு. இந்த ஸ்பெஷல் வெண்டைக்காய் தக்காளி பச்சடி நாமும் எப்படி வீட்டிலேயே எளிதாக செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
வெண்டைக்காய் தக்காளி பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 300 கிராம், தக்காளி – 5, பெரிய வெங்காயம் – 2, கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சாம்பார் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
வெண்டைக்காய் தக்காளி பச்சடி செய்முறை விளக்கம்:
முதலில் 300 கிராம் அளவிற்கு பிஞ்சு வெண்டைக்காய் ஆக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு கழுவி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காயில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்க வெட்டியதும் ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி ஐந்து நிமிடம் வைத்திருந்தால் அதன் ஈரப்பதத்தை டிஷ்யூ பேப்பர் உறிந்து கொள்ளும். பின்னர் சமைக்கும் பொழுது சுலபமாக இருக்கும்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.
வெந்தயம் சேர்த்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். வெங்காயம் எந்த அளவிற்கு பொன்னிறமாக ஆகிறதோ, வெண்டைக்காயும் அந்த அளவிற்கு சீக்கிரம் பிசுபிசுப்பு தன்மையை இழக்கும். இப்போது நறுக்கி வைத்துள்ள வெண்டைக் காய்களை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் வெண்டைக்காய் சீக்கிரம் வதங்கும்.
வெண்டைக்காய் வதங்கியதும் தக்காளி துண்டுகளை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பாதி அளவிற்கு நன்கு மசிய வதங்கியதும், மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசனை போனதும் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடுங்கள். ஐந்து நிமிடத்தில் நன்கு தக்காளி மற்றும் வெண்டைக்காய் வதங்கி சுருண்டு விடும். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக அசத்தலான வெண்டைக்காய் தக்காளி பச்சடி சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசையுடன் கூட தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.