தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் எழுச்சி ற்றுள்ளது. ஒரே வாரத்தில் 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது தினசரி கொரோனா பாதிப்பு. சென்னையில் 6 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தொற்று குறையும் வரை இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாட்களில் தியேட்டர்கள் , பேருந்துகளில் 50% அனுமதி, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவற்றை நீட்டிக்கலாமா, அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் இறையன்பு, உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கால் ஏற்பட்ட பலன்கள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில் பள்ளிகளுக்கு இன்று வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் கடைகளை வகைகளாகப் பிரித்து அதற்கேற்ப செயல்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும். வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்படும் கட்டுப்பாடு நீட்டிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு நன்றாக கை கொடுப்பதால் அதனையும் நீட்டிக்கலாம்.
தியேட்டர்களில் 50% பார்வையாளர்கள் அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அப்படியே தொடரலாம். பூஸ்டர் தடுப்பூசி, 15- 18 வயது பிரிவினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். வரும் 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு தேவையில்லை. இதுபோன்ற பல்வேறு ஆலோசனைகளை மருத்துவக் குழு வழங்கியுள்ளது. ஏற்கெனவே சௌம்யா சுவாமிநாதன், முழு ஊரடங்கு தேவை இல்லை என கூறியிருந்தார். நேற்று ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் மா.சு.வும் முழு ஊரடங்கு போட அரசுக்கு எண்ணமில்லை என்றே தெரிவித்தார். ஆகவே முழு ஊரடங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.