பொங்கல் என்று வந்துவிட்டால் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனி மவுசு உண்டு. மதுரை மாவட்டமே களைகட்டும். உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு தான் காரணம். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரபலமானவை தான். இவை தவிர மதுரைச் சுற்றியுள்ள புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜனவரி 1-இல் அவனியாபுரம், 15-இல் பாலமேடு, 16-இல்அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என சொல்லப்பட்டது.
இந்தாண்டு ஜனவரிக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றே என அனைவரும் நினைத்தனர். இச்சூழலில் கொரோனா பரவல் அதிகரிக்க போட்டிகள் நடத்தப்படுமா என சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகம் குறித்து மதுரையைச் சேர்ந்த வணிக வரி துறை அமைச்சரான பி.மூர்த்தியிடம் செய்தியாளர்கள் ஏற்கெனவே கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “கட்டாயமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இன்றும் இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், ஜல்லிக்கட்டி போட்டிகள் நடக்கும் என உறுதிப்படுத்தினார். பிற்பகல் வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு:
1. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும்.
2.எருதுவிடும் நிகழ்வில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
3.ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற வேண்டும்.
4. பங்கேற்கும் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். வீரர்கள் அனைவரும் நெகட்டிவ் சான்றிதழும் சமர்பிக்க வேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போட்டிக்கு இரண்டு நாளுக்கு முன்பு எடுத்திருக்க வேண்டும்.
5.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 50 சதவீத இருக்கைகள் அல்லது 150 பார்வையாளர்கள்(இவற்றில் எது குறைவோ) மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
6.காளையுடன் அதன் உரிமையாளர் ஒருவர் மற்றும் உதவியாளர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்கள் இருவருக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.
7.ஜல்லிக்கட்டில் பங்கேற்கு காளை மற்றும் அதன் உரிமையாளர், உதவியாளர் பதிவை மூன்று நாள்களுக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும்.
8.அடையாள அட்டை இல்லாதவர்கள் போட்டி நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
9.வெளியூரில் இருப்பவர்கள் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.