தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திராவிலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளுக்குப் பிறகு இம்முடிவை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60-லிருந்து 62ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியத்தை மேலும் 23.39 சதவீதமாக அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஸ்பெஷல் அலோவன்ஸ்களான வீட்டு வாடகை படி உள்ளிட்ட பல்வேறு படிகளை தவிர்த்து அடிப்படை சம்பளம் உயர்த்தப்படுகிறது.
அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டால், அதிலிருந்து பிடித்தம் செய்யப்படும் பிஃஎப் (வருங்கால வைப்பு நிதி) தொகையும் அதிகரிக்கும். இதன் மூலம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது கிடைக்கும் பணப்பலன்களும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயவாடாவில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் அரசு ஊழியர் சங்கத்தினருடன் இணைந்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான காலக்கெடுவையும் அவர் நிர்ணயித்தார்.
ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்ஸிங் பணியாளர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தப்படும். இந்த ஊதிய திருத்தத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,247 கோடி மதிப்பில் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்மார்ட் டவுன்ஷிப்ஸ்- லே அவுட்களில் 10% மனைகள் அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் வீடற்ற அரசு ஊழியர்களுக்கு 20% தள்ளுபடியில் வீடு விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஓய்வுதிய வயது உயர்வு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இளைஞர்கள் மத்தியில் கடுங்கோபத்தை எழுப்பியுள்ளது.