பொங்கல் பண்டிகை வரப்போகிறது. வழக்கமாக பச்சரிசியைக் கொண்டு தான் பொங்கல் செய்வோம். ஆனால் நீங்கள் சிறு தானியங்களைக் கொண்டு பொங்கல் செய்ய நினைத்தால் திணை கருப்பட்டி பொங்கல் செய்யுங்கள். இந்த பொங்கல் டயட்டில் இருப்போருக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இது ஒரு வித்தியாசமான சுவையையும் கொண்டிருக்கும். நீங்கள் வித்தியாசமான பொங்கலை வீட்டில் செய்ய நினைத்துக் கொண்டிருந்தால், திணை கருப்பட்டி பொங்கலை செய்யலாம்.
உங்களுக்கு திணை கருப்பட்டி பொங்கல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திணை கருப்பட்டி பொங்கலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் – 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* திணை – 1/2 கப்
* தண்ணீர் – 2 கப்
* கருப்பட்டி – 1 கப்
* தண்ணீர் – 1/2 கப்
* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
* சுக்கு பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் திணையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு 2 கப் தண்ணீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு, அரை கப் நீர் ஊற்றி, கருப்பட்டி முற்றிலும் கரைந்ததும் இறக்க வேண்டும்.
* பிறகு வெந்து கொண்டிருக்கும் திணையில், கருப்பட்டி நீரை வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியில் ஒரு சிறு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தயாரித்து திணை பொங்கலுடன் சேர்த்து கிளறினால், திணை கருப்பட்டி பொங்கல் தயார்.