தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2021-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸஸ் மெயின்ஸ் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தநிலையில் சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை தொடங்குவதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில்,முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதச் செல்வோருக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. தேர்வர்களின் அடையாள அட்டை மற்றும் அனுமதிச்சீட்டு அல்லது அழைப்புக்கடிதத்தை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.