கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 5 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. சென்னையில் மட்டும் 2,500 க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். கொரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்கவும், எளிதாக மருத்துவமனைக்கு செல்லவும் ஏதுவாக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த சேவையை இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக 42 சிறப்பு கொரோனா ஆம்புலன்ஸ் வாகனங்களை அவர் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு 3 வாகனங்கள் வீதம் , 24 மணி நேரமும் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்படும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல இருக்கும் பொதுமக்கள், 1913 அல்லது 25384520 என்ற எண்ணுக்கு அழைத்தால், இந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.