சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஓமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துவிட்டது. உண்மையான பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700க்குள் இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு 1,892 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 766 பேர் குணமடைந்துள்ளனர். 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுவும் தலைநகர் சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது. அதாவது தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 988 தெருக்களில் 3க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் உள்ளனர். 170 தெருக்களில் 3க்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். இதில் அதிகளவாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 228 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 3,486 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 38,379 தெருக்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.