தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனால், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.
தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அதனை கடுமையாக்க பரிசீலனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கடைநேரம் குறைப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பான அறிவிப்புகள் இன்று அல்லது நாளை வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
அதன்படி, தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.