புரோ கபடி லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், பாட்னா அணிகள் வெற்றி பெற்றன. இதில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் மனீந்தர் சிங் ரெய்டில் 800 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார்.
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 31-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.
மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 31-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்து 4-வது வெற்றியை தனதாக்கியது. இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்-மும்பை (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தா-தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டன் மணீந்தர் சிங் ஆல்ரவுண்டர் மொகமட் நபிபக்ஷ் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. கேப்டன் மணீந்தர் 13 புள்ளிகளையும் மொகமட் நபிபக்ஷ் 10 புள்ளிகளையும் பெற்றுத் தந்தனர். இதில் கடைசி நிமிடத்தில் நபிபக்ஷ் அருமையாக ஒரு சூப்பர் ஆட்டம் ஆடி டேக்கிள் செய்தார். இதனால் ஜெய்ப்பூர் அணி கொடுத்த சவாலை மீறியும் பெங்கால் பேந்தர்ஸ் வெற்றி பெற்றது.
ஜெய்பூர் அணிக்கு அர்ஜுன் தேஸ்வால் மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடி 16 புள்ளிகள் பெற்றுத் தந்தார். ஆனால் இவரது கடைசி ரெய்டு சொதப்பலாக ஜெய்பூர் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 31-30 என்று த்ரில் வெற்றி பெற்றது, தெலுங்கு டைட்டன்ஸின் அன்கிட் பெனிவால் ஒரு புள்ளியை பெற்ற போது டை செய்து விடலாம் என்ற தெலுங்கு டைட்டன்ஸ் கனவில் பாட்னா பைரேட்ஸ் வீரர் சச்சின் மண்ணை அள்ளிப் போட்டார், இதனால் பாட்னா அனைத்து 5 புள்ளிகளையும் பெற்று அபார வெற்றி பெற்றது.