தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த போட்டி இன்றும், கடைசி போட்டி 11ஆம் தேதியும் தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் முடிவடைந்த சில நாட்களில் ஒருநாள் தொடரும் ஆரம்பமாகவிருக்கிறது. ஜனவரி 19ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 23ஆம் தேதி கடைசி மற்றும் 3ஆம் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ரோஹித் சர்மாவுக்கு இன்னும் காயம் குணமாகவில்லை. இதனால் ஒருநாள் தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல துணை கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் தொடர்களில் மாஸ் காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் அணியில் அறிமுகமாகவிருக்கிறார். வெங்கடேஷ் ஐயரும் சேர்க்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக அஸ்வின் மீண்டும் ஒருநாள் தொடருக்கு திரும்பியுள்ளார்.
இச்சூழலில் தென்னாப்பிரிக்கா வாரியமும் ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான ஆன்ரிக் நோர்க்கியாவுக்கும் காயம் குணமடையாததால் ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மார்கோ ஜான்சன் அறிமுக வீரராக களமிறங்குகிறார். கடந்த டெஸ்ட் போட்டியில் தான் இவர் தென்னாப்பிரிக்க அணியில் அறிமுகமானார். டெம்பா பவுமா தலைமையில் முழுக்க முழுக்க இளம்படையை தேர்வு செய்துள்ளது வாரியம்.
இதுதொடர்பாக தேர்வுக்குழு கூறுகையில், “தென்னாப்பிரிக்க அணி இளம் வீரர்களைக் கொண்ட அணியாக தேர்வு செய்துள்ளோம். இவர்களின் செயல்பாட்டைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். எங்கள் அணியில் உள்ள பல வீரர்கள் மிகப்பெரிய இந்திய அணிக்கு எதிராக இன்னும் விளையாடியதில்லை. நிச்சயமாக இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய போட்டித்தொடராக இருக்கும். இளம் வீரர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள், அவர்களின் திறமை ஆகியவற்றை மதிப்பிட இந்தத் தொடர் பேருதவியாக இருக்கும்” என்றது.
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா(கேப்டன்), கேசவ் மகராஜ் (துணை கேப்டன்), டி-காக், ஜூபைர் ஹம்ஸா, மார்கோ ஜான்சன், மலான், சிசான்டா மகலா, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வேனே பர்னல், அன்டில் பெகுல்குவேயோ, பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, தப்ரியாஸ் ஷம்ஸி, ராஸே வேன் டர் டூசென், கெயில் வெரேனே.
இந்திய அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), கோலி, ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஹல், அஷ்வின், வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர்.