விருதுநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ராஜீவ் காந்திக்குப் பிறகு 2வது பிரதமராக மோடி விருதுநகர் வருகிறார். அவரை வரவேற்கிறோம். மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் வருகை இருக்க வேண்டும். சிவகாசி பட்டாசு பிரச்சினை குறித்தும் பிரதமர் மோடி பேச நேரம் ஒதுக்க வேண்டும். காரைக்குடியில் நீரி அமைப்பின் கிளையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதேபோன்று,விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வருகையையொட்டி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வருகிறார். அவர் வரும்போது மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட வேண்டும்.
சமத்துவ பொங்கல் விழா கொண்டாடும் தமிழகத்தில் பாஜகவினர் மார்கழியில் மோடி பொங்கல் கொண்டாடுகிறார்கள். பாஜக இதை நிறுத்த வேண்டும். இதேபோன்று, வட மாநிலங்களில் மோடி நவராத்திரி விழா, மோடி விஜயதசமி விழா கொண்டாட முடியுமா? முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக உள்ளார். தமிழகத்தில் ஒரு முன்னாள் அமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது இதுவே முதன்முறை. தவறு செய்யவில்லையெனில் சட்டத்திற்கு முன் அவர் வந்து நிற்க வேண்டும். அவரைக் காப்பாற்ற பஜக துணைநிற்கும் என்றால் அது தவறு. ஒருநாள் அவருக்கு தண்டனை உண்டு” என்றார்.