கொரோனா பரவல் காரணமாக மிக மிக தாமதமாகவே இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன. குறிப்பாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமே நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்தே முறையான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இப்படியான சூழலில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்துவது என்பது இயலாத காரியம் என்பதை பள்ளிக்கல்வி துறை உணர்ந்தது. இருப்பினும் இந்த முறை கட்டாயம் பொதுத் தேர்வு நடத்திட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இன்று காலை கூட செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார். நேரடியாக மாணவர்களால் பொதுத் தேர்வை எழுத முடியாது என்பதால், ஆயத்தமாகும் வகையில் இரு முறை திருப்புதல் தேர்தல் நடத்தப்படும் என்றார். ஜனவரி மற்றும் மார்ச் 3ஆம் வாரத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கும் எனவும் கூறியிருந்தார். இச்சூழலில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 27ஆம் தேதி வரையிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 28ஆம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21 முதல் 26ஆம் தேதி வரையிலும் 12ஆம் வகுப்பு மார்ச் 21 முதல் 29 தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.