மத பேதமின்றி அனைவரும் தமிழர்களாக ஒன்றுகூடி கொண்டாடப்படும் திருவிழாக்களில் பொங்கலுக்கு எப்போதுமே தனி இடமுண்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்தாண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் ரொக்கப் பணம் கொடுக்கப்படாமல் இருப்பது மட்டுமே ஒரேயொரு குறை. இருப்பினும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள், பண்டிகையின்போது பலகாரங்கள் செய்வதற்கு தேவையான சமையல் பொருட்கள் வழங்கப்படவிருக்கின்றன.
பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு துணிப்பையுடன் விநியோகிக்கப்படவுள்ளன. ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் அளிக்கப்படும் என தெரிகிறது. 2 கோடியே 15 லட்சத்து 29 ஆயிரத்து 114 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும்; 18 ஆயிரத்து 946 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கும் வழங்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் என்றும், தினசரி சுழற்சி முறையில் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்ய ஆணையிட்டுள்ளது.
ஒருவர் கூட விடுபட்டுவிட கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளது. 750 அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள், நேரம் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் எவரேனும் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளது. விடுமுறை தினமான ஜனவரி 7ஆம் தேதி நியாய விலை கடைகளை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நாளுக்கு பதிலாக ஜனவரி 15 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.