மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. அத்துடன் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. தொடர் விடுமுறை காரணமாக திட்டமிட்டபடி பாடத்திட்டத்தை முடிக்காமல் உள்ள காரணத்தினால் அரையாண்டுதேர்வு கூட இந்த முறை நடத்தப்படவில்லை. இதன் காரணமாக பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்நிலையில் பள்ளி கட்டிடங்களின் தன்மை, பள்ளிகளில் பாலியல் புகார் உள்ளிட்டவை குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார் . இதன் பின்னர் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ” பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டடங்கள் உள்ள 1600 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் பெட்டி வைக்கப்படும் . மேலும் 14417 என்ற புகார் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.ஜனவரி 3ஆவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்” என்றார்.