நெல்லை மாவட்டம் பாபநாசம், அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கி வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பக்தர்கள், பயணிகள், பொதுமக்கள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறை வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டம் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை மூலம் கலந்தாலோசித்து இன்று திறக்கப்படுகிறது.
மேலும், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீரின் அளவினை பொருத்தும், சுற்றுலா பயணிகள் நலன் கருத்தில் கொண்டு குளிக்க அனுமதிக்கப்படும். அருவிகளுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் சோதனைச்சாவடிகள் வழியாக காலை சுமார் 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். சுற்றுலா பயணிகள் அனைவரும் வன விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.