உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்தடுத்து புது புது வைரஸ்களும் பரவி வருகின்றன. அந்த வகையில், ஒமைக்ரோன் வைரஸ் ஆனது தற்போது உலகநாடுகள் எங்கும் பரவிக்கொண்டு இருக்கிறது.
இதன் பாதிப்பு பெரியதாக இருக்ககூடும் என பல விஞ்ஞானிகள் மற்றும் தொழிலதிபர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 6½ லட்சம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.
அமெரிக்காவிலும் ஒமைக்ரான் முதல் களப்பலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்தியாவில் 213 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 77 பேர் குணம் அடைந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மராட்டியத்தில் 57, டெல்லியில் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தெலுங்கானா 20, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 18, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு – காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம், சண்டிகர், தமிழகம், லடாக், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவ தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். ஒமைக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.