கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. பரவல் குறைந்த பிறகு 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
அதேபோல கடந்த நவம்பர் மாதம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட சமயம் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தது.
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டு வாரங்கள் பள்ளிகள் முறையாக செயல்படவில்லை.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் நீண்ட விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது கற்றலில் மிகப்பெரிய இடைவெளியையும் ஒருவித அயர்ச்சியையும் உண்டாக்கியது.
இதனை பரிசீலனை செய்த அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இனி மழைக்காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் மழைக் காலங்களான நவம்பர், டிசம்பர் மாதங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அந்த நேரங்களில் விடுமுறை அளிப்பதற்குப் பதிலாக பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வரவே இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு மழைக்கோட், பூட்ஸ் வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள், செருப்பு ஆகியவற்றுடன் இனி ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.