இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் குறைந்தது.
புதுவகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் உலகம் முழுவதும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலக பொருளாதாரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகள் நிலவரமும் பாதகமாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளியது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய 2 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 28 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 746 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,699 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 121 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.252.55 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.85 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,189.73 புள்ளிகள் குறைந்து 55,822.01 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 371.00 புள்ளிகள் சரிவு கண்டு 16,614.20 புள்ளிகளில் முடிவுற்றது.