திருநெல்வேலியிலுள்ள சாஃப்டர் தனியார் பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே. அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், எம். இசக்கி பிரகாஷ், எஸ், சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
கட்டடத்தை முறையாக ஆய்வு செய்யாமல் சான்றிதழ் வழங்கியிருப்பதாக அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதனடிப்படையில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர். சிதலமடைந்து உள்ள பள்ளி கட்டடங்களை இடிக்கவும் ஆணையிட்டுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றஞ்சாட்டியிருந்தார். இச்சம்பவம் கேட்டு துடிதுடித்து போனதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார். இச்சூழலில் நெல்லை திருச்சபை உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.